அடிக்கடி உன் கை கடிகாரத்தில் நேரத்தைப் பார்க்காதே, நீ பார்க்கிறாய் என்கின்ற சந்தோஷத்தில் என்னைப் போன்று அதுவும் ஸ்தம்பித்து விடப் போகிறது!

நான் இருச்சக்கர வாகனத்தில் செல்லும் போது பின்னோக்கி செல்லும் மரங்கள் எல்லாம், நீ பின்னால் அமர்ந்து வருகையில் மட்டும் ஒன்றுக்கு ஒன்று முந்திக்கொண்டு முன்னோக்கி வருகிறது உன்னைப் பார்க்க. அப்படி என்ன இருக்கிறது உன்னிடம் என் காதலைத் தவிர?

உன்னை அழகு படுத்துவதாய் நினைத்துக் கொண்டு நீ நெயில் பாலிஷ் பூசிக்கொள்கிறாய் உனக்கு எப்படி தெரியும் அது உன் நகங்களில் படர்ந்து தன்னை அழகு படுதிக் கொள்கிறது என்று!

ஒவ்வொரு முறையும் கவிதை எழுதிய கையோடு உன்னுடன் பகிர்ந்து கொள்கிறேன், நீ படித்த பிறகு தான் என் கவிதைகள் முழுமையடைகின்றன.

தாவணி உடுத்திக்கொண்டு தரையில் அமர்ந்த படி என்னை
நினைத்துக் கொண்டிருந்தாய்நான் வருவது கூட தெரியாமல்... தேவதை தாவணியில் எப்படி இருக்கும் என்று உன்னைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். உண்மையைச் சொன்னால் ஒரு நிமிடம் செத்து தான் பிழைத்தேன்..

நீ ரயில் நிலையம் செல்லும் போது மட்டும் எந்த நேரமானாலும் இருக்கையும் மரத்தின் நிழழும் ஒன்றாய் இருகிறதே, நீ அமர்வாய் என்று இருக்கை இடம் மாறிக் கொள்கிறதா இல்லை நிழல் இடம் மாறிக் கொள்கிறதா?

கலை இழந்து நிற்கிறது கோவில் சிற்ப்பங்கள் எல்லாம் உன்னை பார்க்காமல், வா சிறிது நேரம் காலாற நடந்து விட்டு வரலாம்..

மேகம் மூடி வானம் எங்கும் கருமை படர்ந்திருந்தது ஊரே சொன்னது மழை வரும் என்று, எனக்கு மட்டும் தான் தெரியும் விடுமுறைக்கு நீ ஊர் வருகிறாய் என்று..

நீ உபயோகப்படுத்தும் கைப்பேசி மீது கொஞ்சம் கோபம் தானடி... உன் கன்னம் தொடும் சுகத்தில் தன்னை மறந்து நம் பேச்சை நீட்டச் செய்கிறது சுதாரித்துக் கொள்.

உன் விரல்களால் வண்ணம் தீட்டுவதாக இருந்தால், நிலாக் கூட வண்ணமாய் மாறக் கூடும்.

பட்டும் படாமலும் என்னைக் கட்டி அணைத்தாய்!
என்னிடம் இதுவரை யாருமே நுகர்ந்திடாத வாசனைத்
திரவியம் என்று ஊரே மெச்சியது.






No comments:
Post a Comment